jeudi 10 mai 2018

வெண்டாழிசை - 2



வெண்பா
மேடை - 67
  
ஆசிரியத் தளையான் வந்த வெண்டாழிசை
  
நேரிசை வெண்டாழிசை
  
எங்கும் இன்றமிழ் இசைப்பீர்! இன்பம்
பொங்கும் பாக்களைப் புனைவீர்! - தங்கும்
மங்கலம் மணக்குமே மலர்ந்து!
  
முன்னைத் தோன்றிய முத்தமிழ் மொழியை!
உன்னைக் காத்திடும் ஒளியை! - என்றும்
அன்னை அன்பென அருந்து!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இன்னிசை வெண்டாழிசை
  
பொங்கும் இனிமை பூத்துக் குலுங்கும்
எங்கள் தமிழாம் இணையிலா மொழியைச்
செங்கோல் செலுத்திடச் செய்
  
எண்ணும் எழுத்தும் இருவிழி என்றே
மண்ணில் எண்ணி மாண்பாய்க் கற்றோர்
உண்ணும் உணவே உணவு.
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஆசிரிய உரிச்சீர்கள் [தேமா, புளிமா, கூவிளம் கருவிளம்] வந்து பயிலும் மூன்றடிப் பாடல். [ஆசிரியப்பாவில் வந்துறும் நேரொன்று ஆசிரியத் தளையும், நிரையொன்று ஆசிரியத் தளையும், இயற்சீர் வெண்டளையும் கலந்து இப்பாடல் அமையும்]
  
முதல் இரண்டடிகள் நாற்சீர் அடிகள். ஈற்றடி முச்சீர் ஆகும். வெண்பாவின் ஈறுபோல் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் முடிய வேண்டும்.
  
முன்றடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
  
ஒற்றுமையை வலியுறுத்தி ஆசிரியத் தளையான் வந்த வெண்டாழிசையை நேரிசையுள் ஒன்றும் இன்னிசையுள் ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.05.2018   

Aucun commentaire:

Enregistrer un commentaire