mercredi 6 décembre 2017

மாத்திரைச் சுருக்கம்

மாத்திரைச் சுருக்கம்
  
குற்றெழுத்துக்கு ஒரு மாத்திரை. நெட்டெழுத்துக்கு இரண்டு மாத்திரை. ஒரு சொல்லுக்கு ஒரு பொருளுரைத்து. அச்சொல்லின் மாத்திரையைக் குறைத்து வேறு பொருள் பயக்கும்படி பாடப்படுவது மாத்திரைச் சுருக்கமாகும். [நெடிலில் தொடங்கும் சொல்லைக் குறிலாக மாற்றிப் பொருள் கொள்ளும் பாடல்]
  
எண்ணொன்று இறங்கும் எழில்சேலை மேனியளே!
எண்ணொன்று இறங்கும்பொற் றார்மகளே! - பண்மகளே!
எண்ணொன்று இறங்கும் தொழிற்கூடத் தண்மகளே!
கண்ணிங்குக் காணும் கனவு!
  
விளக்கம்
  
சேலை - சீலை, இதில் ஒரு மாத்திரை நீக்க, சிலை - சிலை போன்ற மேனியைக் கொண்டவளே.
  
தார் - மாலை, இதில் ஒரு மாத்திரை நீக்க, மலை - மலைமகளே
  
தொழிற்கூடம் - ஆலை, இதில் ஒரு மாத்திரை நீக்க, அலை - அலைமகளே!
  
பண்மகளே - கலைமகளே
  
முப்பெரும் தேவியாக அவள் விளங்குகின்றாள். அவள் மேனி சிலைபோல் ஒளிர்கிறது. அவளை எண்ணிக் கனவுகள் பெருகுகின்றன.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்.
06.12.2017

Aucun commentaire:

Enregistrer un commentaire