vendredi 24 novembre 2017

மாத்திரைப் பெருக்கம்



மாத்திரைப் பெருக்கம்
  
குற்றெழுத்துக்கு ஒரு மாத்திரை. நெட்டெழுத்துக்கு இரண்டு மாத்திரை. ஒரு சொல்லுக்கு ஒரு பொருளுரைத்து. அச்சொல்லின் மாத்திரையைக் கூட்டி வேறு பொருள் பயக்கும்படி பாடப்படுவது மாத்திரைப் பெருக்கமாகும் [ குறிலில் தொடங்கும் சொல்லைக் நெடிலாக மாற்றிப் பொருள் கொள்ளும் பாடல்]
  
எண்ணென்று மேவும் எழுத்திணையும் நெஞ்சுடையாள்!
எண்ணென்று மேவும் எழில்மனத்தால் - வண்டமிழாள்!
எண்ணென்று மேவும் இளம்மெய்யாள்! இன்பமுறக்
கண்ணென்று கொஞ்சிக் களி!
  
எண்ணென்று மேவும் - ஒரு மாத்திரை கூடி
  
எழுத்திணைந்தால் - அசை, இதில் ஒரு மாத்திரையைக் கூட்டினால் ஆசை. ஆசை நெஞ்சுடையாள்.
  
மனம் - அகம், இதில் ஒரு மாத்திரையைக் கூட்டினால் ஆகம் - மார்பு. எழிலான மார்பினை உடையவள்.
  
மெய் - உடல், இதில் ஒரு மாத்திரையைக் கூட்டினால் ஊடல் - கலவிப்பிணக்கம்.
பிணக்கம் தீர்ந்து இன்பமுறக் கண்ணே என்று கொஞ்சிக் களிக்கவும்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.11.2017

-----------------------------------------------------------------------------
  
மாத்திரைப் பெருக்கம் - 2
  
படியொன்று ஏறியே வானில் பறக்கின்றேன்!
குடியொன்று ஏறியே நெஞ்சம் குதிக்கின்றேன்!
அடியொன்று ஏறியே உம்மை அழைக்கின்றேன்!
கொடியொன்று ஏறியே அன்பைக் கொடுக்கின்றேன்!
  
படி - பாடிப் பறக்கின்றேன்.
குடி - கூடி நெஞ்சம் குதிக்கின்றேன்.
அடி - ஆடி அழைக்கின்றேன்.
கொடி - கோடி அன்பைக் கொடுக்கின்றேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.08.2016
  
-----------------------------------------------------------------------------
  
மாத்திரைப் பெருக்கம் - 3
  
அலையிங்கு நீண்டுவரக் கூடம் செல்வோம்!
   அசையிங்கு நீண்டுவரக் காதல் கொள்வோம்!
மலையிங்கு நீண்டுவர வாகை ஏற்போம்!
   மரையிங்கு நீண்டுவர நெஞ்சம் காப்போம்!
கலையிங்கு நீண்டுவர விடிவைக் காண்போம்!
   கடையிங்கு நீண்டுவரப் புள்ளைப் பார்ப்போம்
வலையிங்கு நீண்டுவரக் கவியைச் சொல்வோம்
   வரமிங்கு நீண்டுவரக் காலம் வெல்வோம்!
  
அலை - ஆலை [தொழிற்கூடம்]
அசை - ஆசை [ காதல்]
மலை - மாலை [ வாகை]
மரை - மாரை [ நெஞ்சு]
கலை - காலை [விடியல்]
கடை - காடை [புள்]
வலை - வாலை [கவி - குரங்கு]
வரம் - வாரம் [காலம்]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.11.2017

1 commentaire: