mardi 4 août 2015

வெண்பாக் கொத்து!



வெண்பாக் கொத்து!

குறள் வெண்பா

எங்கும் தமிழை இசைத்து மகிழ்ந்திட்டால்
பொங்கும் புவியிற் புகழ்!

நேரிசைச் சிந்தியல் வெண்பா

எங்கும் இருக்கின்ற ஏற்ற இறக்கத்தைக்
கங்கு கடலில் கரைத்திடுவோம்! - சங்கமிடும்
பொங்கல் சுவையாய்ப் புகழ்!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

எங்கும் எரித்திடுவோம்! என்றும் எதிர்த்திடுவோம்!
சுங்கி நமைப்புரிக்கும் சாதியெனும் சூதினை!
பொங்கலெனப் பொங்கும் புகழ்!

நேரிசை வெண்பா

எங்கும் தமிழர் இணைந்து செயற்பட்டால்
தங்கும் வளங்கள் தழைத்தோங்கும்! - சிங்கமெனக்
காக்கும் திறமுற்றால் காலத்தை வென்றோங்கிப்
பூக்கும் புவியுட் புகழ்!

இன்னிசை வெண்பா

எங்கும் தமிழாய் எதிலும் தமிழாய்..நாம்
இங்குறச் செய்திட்டால் இன்னல் அகன்றோடும்!
இன்பம் நிறைந்தாடும்! இவ்வுலகே வாழ்த்துரைக்கப்
பொன்னாய்ப் பொலியும் புகழ்!

பஃறொடை வெண்பா

எங்கும் இருக்கும் இறைவன் எழிலுணர்க!
தங்கத் தமிழின் தகையுணர்க! - சங்கப்
புலவர் புகன்ற நெறியுணர்க! இன்பம்
குலவும் குறளமுதைக் கொள்க! - உலகினில்
உள்ள அனைவரும் உற்ற உறவாக
அள்ளி அணைக்கும் அகம்பெறுக! - உள்ளத்துள்
உண்மை ஒளியேற்றி ஒண்மை மறையறிக!
வண்கை வழங்கும் மகிழ்வுறுக! - வெண்மைக்
கவியுள் கதைத்த கருத்தை தெளிந்தால்
புவியுட் பொலியும் புகழ்!

இலக்கண விளக்கம்

வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

மேல் உள்ள வெண்பாக்கள் 'எங்கும்', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'புகழ்' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.

01.07.2015


13 commentaires:

  1. வணக்கம்
    ஐயா

    ஒவ்வொன்றையும் பற்றி கொடுத்த விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்.பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. அனைவருக்கும் பயன்படும் அற்புதமான
    வழிகாட்டிப் பதிவு
    பாதுகாத்து வைத்துக் கொண்டேன்
    மிக்க நன்றி

    RépondreSupprimer
  3. பல வெண்பா வகைகளுக்கு எடுத்துக் கட்டியமைக்கு நன்றி . வெண்பாவில் முதல் சீரிலும் இரண்டாம் அடியில் நான்காம் சீரிலும் எதுகை கட்டாயமா ஐயா?

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வெண்பாவின் இரண்டாம் அடியில் நான்காம் சீர் எதுகை பெற்றால்,
      நேரிசை வெண்பா!

      வெண்பாவின் இரண்டாம் அடியில் நான்காம் சீர் எதுகை பெறாமல் வருவது இன்னிசை வெண்பா

      இவைபோல்

      சிந்தியல் வெண்பாவிலும்
      பஃறொடை வெண்பாவிலும்
      கலிவெண்பாவிலும்

      நேரிசை, இன்னிசை அமையும்

      வெண்பா வகையின் விளக்கம் அளித்திட்டேன்
      நண்பா அடைக நலம்!


      Supprimer
  4. பயனுள்ள பதிவு. இவ்வாறான பதிவுகளை உணர்ந்து பயன்படுத்தும்போது தொடர்ந்து எழுதுவதற்கு என்னைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி.

    RépondreSupprimer
  5. அருமையான விளக்கம் ஐயா... நன்றி...

    RépondreSupprimer
  6. தினமொரு புதுப்பாட்டு திகட்டாத அமுதம். வரும் நாட்களில் பழகிப்பார்க்கிறேன் ஐயா.

    கொத்து மலரெடுத்து கோர்த்த விதமழகு
    பித்தாக்கும் விந்தைப் பெயரிதுவே -சத்தாகும்
    முத்தமிழில் சாரெடுத்து இங்களித்த என்ஆசான்
    முத்தெடுத்து ஈந்த மொழி.

    RépondreSupprimer
  7. வணக்கம் ஐயா!

    எங்கள் குருவே! இணையில்லாப் பேரருளே!
    பொங்கும் கடலே! பொறையேநீ! - இங்குன்றன்
    கொத்துமலர்க் கோலப்பா கண்டுள்ளம் பித்தானேன்!
    புத்தொளிதான் பூத்த புகழ்!

    உங்கள் வெண்பாக் கொத்து கொள்ளை அழகு!
    ஒவ்வொரு வகையிலும் எப்படி எழுதலாமெனக் கற்றுக் கொள்கிறேன்!
    நீங்கள் கொண்ட முதற்சீரையும் ஈற்றுச் சீரையும் வைத்து
    இங்கு வெண்பா தந்தேன்.

    பிறிதொரு சமயத்தில் வெண்பாக் கொத்தினை எழுதுகிறேன் ஐயா!

    இன்று வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்த உங்கள் எண்சீர் விருத்தம்
    இன்னும் என்னை ஒரு நிலைக்குக் கொண்டு வரவில்லை!

    அனைத்திற்கும் மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  8. வணக்கம் ஐயா,
    என்னைப் போல் வளரும் தலைமுறைக்கு தாங்கள் கொடுத்தது,
    நன்றி ஐயா.

    RépondreSupprimer
  9. வணக்கம் ஐயா! தங்கள் அன்பும் தமிழ் மீது கொண்ட ஆர்வமும் மிகப் பெரியது. வாழ்க தமிழ் !
    என் போறோர் உய்ய வழி சமைத்து உய்வீர் நீரே! மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா!

    RépondreSupprimer
  10. வணக்கம் ஐயா ! இது வெளியிட அல்ல சும்மா ஒரு முயற்சி செய்து பார்த்தேன் பௌஹ்றொடை எழுதி பார்த்தேன் சரிவரவில்லை பார்க்கலாம். முடிந்தால் அனுப்புகிறேன். பிழைகள் நிறைய இருக்கும் நிச்சயமாய். நன்றி ஐயா ! வலைச்சரம் அழகாக செல்கிறது. தங்களுக்கு இப்போ நேரம் இருக்காது என எண்னுகிறேன். ஆகையால் நேரம் இருக்கும் போது பாருங்கள். நன்றி!

    எங்கும் நிறைந்து ஏற்கின்ற வண்ணமே
    பொங்கி பரவும் தமிழ் !

    எங்கும் சிறந்திட எண்ணும் எழிலினை
    இங்கள்ளித் தூவுமும் அன்பால்தான் - எங்கணும்
    பொங்கியே விஞ்சும் தமிழ்


    எங்கெல்லாம் தேடி யலைந்தாலும் கிட்டாது
    சங்கம் வளர்த்துலகில் சாதனை செய்தாலே
    பொங்கிப் பொலியும் தமிழ்!

    எங்குமே எம்மவர்தான் ஏன்பதட்டம் வீணாக
    மங்கா தினிவளரு மெம்மொழி - பங்கமின்றி
    பாரெலாம் பார்த்தொதுங்க பண்பாடும்! விண்ணிலவாய்
    தேரேறி ஆளும் தமிழ் !


    எங்கும் எதிலும் எழில்மிகும் வண்ணமாய்
    வங்கக் கடல்போல் விரிந்திடவே வெள்ளலைபோல்
    அள்ளிக் கரையெல்லாம் மெள்ளத் தெளிக்கவே
    கொள்ளை அழகாம் தமிழ் !

    RépondreSupprimer
  11. வணக்கம் !
    முத்தான சொல்லெடுத்து மூழ்கடித்தாய் இன்பத்துள் !
    அத்தனையும் பொன்என்பேன் அப்பனே !-வித்தை
    பலகற்றும் வீறுகொண்டு பாப்புனையும் நீயே
    உலகத்தில் எம்மின் உயிர் !

    ஐயா தங்களைப் பாராட்ட எங்களிடம் வார்த்தைகள் இல்லை !
    செந்தமிழே வாழ்வென்று சிந்தையிலே வைத்துப்பா முந்தும்
    வேகத்தைக் கண்டு மெய் சிலிர்க்கின்றது !தங்களிடம் நாங்கள்
    மாணவிகளாக இருப்பதே பெரும் பேறாகக் கருதுகின்றேன் .
    வாழ்த்துக்கள் ஐயா !வாழ்க வளமுடன் .

    RépondreSupprimer

  12. பலபல பாக்களைப் பாடிப் படைத்தாய்
    உளமுறும் வண்ணம் உயர்வாய்! - வளம்பொழியும்
    நண்பாவுன் சொத்தே நறுந்தமிழ்! நீ..தீட்டும்
    வெண்பாவின் கொத்தே விருந்து!

    RépondreSupprimer